எபோலா நோய்க்கு அமெரிக்க டாக்டர் பலி

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

adஒமகா : எபோலா நோய்க்கு அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்நோய்க்கு அமெரிக்காவில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா நோய்க்கு 5000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் பரவாமல் தடுக்கும் வகையில் அந்தந்த நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.எபோலாவை தடுக்க அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வருவோர் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த மாதம் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா வந்த நபர் ஒருவர் எபோலாவுக்கு பலியானார்.இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒமகா நகரை சேர்ந்த டாக்டர் மார்ட்டின் (44) என்பவர் எபோலா நோயால் உயிரிழந்துள்ளார். ஒமகாவில் வசிக்கும் இவர், மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் தனது சொந்த நாடான சியரா லியோன் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அங்கிருந்து சமீபத்தில் அமெரிக்கா திரும்பிய மார்ட்டினுக்கு எபோலாவின் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


ஒமகாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மார்ட்டினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எபோலா நோயின் பாதிப்பு அவருக்கு தீவிரமாக இருந்ததால், சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன. அவருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மார்டினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் உயிரிழந்தார். இறந்துபோன மார்ட்டினுக்கு ஒரு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.மார்ட்டின் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில், எபோலா நோய் தாக்கிய 2 பேர் சமீபத்தில் குணமாகினர். நோய் முற்றிய நிலையில் மார்ட்டின் இங்கு சேர்க்கப்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



எபோலா நோய்க்கு அமெரிக்க டாக்டர் பலி

Category:

0 comments