141.30 அடி நிரம்பிய நிலையில் முல்லைப்பெரியாறு அணை ஓரிரு நாட்களில் 142 அடியை எட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

mullaidamசென்னை,


முல்லைப்பெரியாறு அணை 141.30 அடி நிரம்பியுள்ள நிலையில், தற்போது அப்பகுதியில் மழை குறைந்ததால், 142 அடியை எட்ட ஓரிரு நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.


இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–


முல்லைப்பெரியாறு அணை

தமிழகத்தில் உள்ள மேட்டூர், பவானிசாகர், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட முக்கிய அணைகளில் ஒன்று முல்லைப்பெரியாறு. முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டு ஆறுகள் சேரும் இடத்தின் கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து, முல்லைப்பெரியாறு அணை என்று அழைக்கப்படுகிறது. இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 8 ஆயிரத்து 144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர் மற்றும் தேனி– அல்லிநகரம் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், இந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குடிநீர்த்தேவையையும் நிறைவேற்றி வருகிறோம். இதுதவிர மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், உசிலம்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றிய பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனி குடிநீர்திட்டம் மூலம் இப்பகுதிகளின் குடிநீர் தேவையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.


ஆய்வு குழு

இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தில் கேரள அரசியல் கட்சிகளும், பாதுகாப்பாகவும், பலமாகவும் இருக்கிறது என்கிற நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் உள்ளன.


இதுகுறித்து கேரளவில் பல்வேறு போராட்டங்களும் நடந்துவந்தன. இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய கடந்த 2010–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில், மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி.டி.தட்டே, இந்திய அரசின் நீர் ஆணையத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் பி.கே.மோஹதா, தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரள அரசின் பிரதிநிதியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோரை உறுப்பினராக கொண்ட 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.


142 அடி தண்ணீர்

இக்குழு அணையை ஆய்வு செய்து 2012–ம் ஆண்டு ஏப்ரல் 25–ந் தேதி அளித்த தனது அறிக்கையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக கூறி உள்ளது. அதன்படி தற்போது பெய்து வரும் மழையால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இருந்தாலும் கடந்த 2006–ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால் அப்போது 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.


பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த நிலையில் ‘வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைத்த’ கதையாக, முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் நிரப்புவது தொடர்பாக, கேரள மாநில அரசியல் கட்சியினர் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.


அணைக்குள் தேவையில்லாதவர்கள் நுழைவதை தடுப்பதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளோம். இருந்தாலும், கடந்த வாரம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நேற்றைய நிலவரப்படி 141.30 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் தற்போது மழை அளவு குறைந்துள்ளதால், 142 அடியை எட்ட இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.



141.30 அடி நிரம்பிய நிலையில் முல்லைப்பெரியாறு அணை ஓரிரு நாட்களில் 142 அடியை எட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

Category:

0 comments