தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளை காப்பாற்ற நடவடிக்கை விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள குழந்தைகளின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
மிகுந்த அதிர்ச்சி
இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் 5 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மேலும் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளது என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
அமைச்சர் நேரில் செல்ல வேண்டும்
இன்று(நேற்று) கூட தர்மபுரி மருத்துவமனையில் இருந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
11 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்ததற்கு முழுப் பொறுப்பையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அக்குடும்பத்திற்கு தேவையான நிதி உதவிகளையும் செய்திட வேண்டும்.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதைப்போல கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை இந்த அரசு வழங்கவில்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்து விட்டது. தமிழக அரசு இனியும் இதுபோன்ற கட்டுகதைகளை அவிழ்த்து விடாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருகின்ற பிஞ்சு குழந்தைகளை காப்பாற்ற சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும்.
தர்மபுரியில் நடைபெற்ற சோக சம்பவத்தை படிப்பினையாகக் கொண்டு தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, அங்கே சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரியில் நடைபெற்ற சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்த மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளை காப்பாற்ற நடவடிக்கை விஜயகாந்த் வலியுறுத்தல்
Category:
0 comments