11 குழந்தைகள் இறப்பு: தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு முதல்–அமைச்சர் அறிக்கை

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

pannerselvamசென்னை,


தர்மபுரி அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் இறந்ததையொட்டி, தொடர் கண்காணிப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–


ஆய்வு கூட்டம்

தர்மபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகளில் 11 பச்சிளம் குழந்தைகள் கடந்த 14–ந்தேதி முதல் இன்று வரை இறந்துள்ளனர் என்பதை அறிந்து, இது குறித்த ஒரு ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் நத்தம் இரா.விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பெ.மு.பஷீர் அஹமது, ப.செந்தில் குமார், என்.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிகிச்சை குறைபாடு இல்லை

தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் இறப்புகள் அனைத்தும் பல்வேறு இயற்கையான காரணங்களால் தான் நிகழ்ந்துள்ளது என்பதும், இதில் சிகிச்சை குறைபாடு எதுவும் இல்லை என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.


பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் உயிருடனும், நல்ல வளச்சியுடனும் பிறப்பதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழகத்தில் பல்வேறு முன்னோடி திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தியுள்ள காரணத்தால் இந்தியாவிலேயே குறைந்த குழந்தை இறப்பு விகிதத்தில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் என்ற உயர் நிலையை எட்டியுள்ளது. அகில இந்திய அளவில் ஆயிரம் உயிருடன் பிறக்கும் குழந்தைகளில் 40 குழந்தைகள் இறப்பு என்று உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு 21 தான். தர்மபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 19 தான். தர்மபுரி மாவட்டத்தில் 77 சதவீதம் பிரசவங்கள் அரசு மருத்துவ நிலையங்களிலேயே நடைபெறுகின்றன.


சிசு மரண விகிதம்

ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களின் காரணமாகத் தான் தமிழ்நாட்டில் சிசு மரண விகிதம் மிக குறைவாக உள்ளது. தாய் மற்றும் சேய் நலன் காக்கும் வகையில் ரூ.12 ஆயிரம் வழங்கப்பெறும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம், ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் நிலைப்படுத்தும் பிரிவுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், பிரசவ உடனாளர் திட்டம், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிசு மரண விகிதத்தை மேலும் குறைக்கும் பொருட்டு தற்போது 64 பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்களும், 114 பச்சிளங்குழந்தைகள் நிலைப்படுத்தும் பிரிவுகளும் மாநிலம் முழுவதிலும் செயல்பட்டு வருகின்றன.


தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14–ந்தேதியன்று 5 பச்சிளங்குழந்தைகள் இறந்தன என்று தெரிந்தவுடன், சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பச்சிளங்குழந்தைகள் தீவிர கண்காணிப்புப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர், டாக்டர் சீனிவாசன் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


சென்னை மருத்துவ குழு

அவரது ஆய்விலிருந்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எந்தவொரு மருத்துவ ரீதியான குறைபாடுகளும் காணப்படவில்லை. தற்போதும் 73 பச்சிளங்குழந்தைகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் பச்சிளங்குழந்தை நிபுணர்கள் டாக்டர் நாராயண பாபு, டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர் குமுதா ஆகியோர் தர்மபுரி மருத்துவமனையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


எடை குறைவு

இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில் 7 குழந்தைகள் இரண்டரை கிலோ எடைக்கு குறைவாக இருந்தன. அதில் 5 பச்சிளம் குழந்தைகள் 1½ முதல் 1¾ கிலோ எடை மட்டுமே இருந்தன. இந்த குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பெற்றெடுக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 37 வார கர்ப்ப காலத்திற்குப் பதிலாக 28 லிருந்து 34 வாரத்தில் குறைப்பிரசவம் நடைபெற்றுள்ளது. இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில், 8 குழந்தைகள் இதர மருத்துவமனைகளில் இருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.


கடந்த நான்கு நாட்களில் 11 குழந்தைகளின் இறப்புக்குக் காரணம், மிக இளம் வயது தாய்மார்கள், முந்தைய பிரசவத்திற்கும் தற்போதைய பிரசவத்திற்கும் மிகக் குறைந்த இடைவெளி இருந்தது, குறைப் பிரசவம், பிறந்த குழந்தை மிகக் குறைவான எடை கொண்டிருந்தது ஆகியவையே ஆகும்.


தொடர் கண்காணிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் சிசு மரண விகிதம் 19 என உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக மாதமொன்றுக்கு 2,050 உயிருள்ள குழந்தைகள் பிறக்கின்றன.


39 சிசு மரணங்கள் ஏற்படுகின்றன. அந்த விகிதாச்சார அடிப்படையிலேயே நடப்பு மாதமும் சிசு இறப்பு ஏற்பட்டிருந்தாலும், நான்கு நாட்களில் சிறிதளவு அதிக இறப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர் கண்காணிப்புக்காக கீழ்க்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:–


கண்காணிப்பு நடவடிக்கைகள்

* மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


* தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து பச்சிளங்குழந்தைகளுக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.


* தர்மபுரி மாவட்டத்தில் பிரசவம் நடைபெறும் 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் சிக்கலான பிரசவங்களை உரிய நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


* கர்ப்பகால பராமரிப்பை கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


* இணை இயக்குநர் சுகாதாரம், துணை இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூலம் எடை குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து மேல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



11 குழந்தைகள் இறப்பு: தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு முதல்–அமைச்சர் அறிக்கை

Category:

0 comments