இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா கடைசி போட்டியில் ‘திரில்’ வெற்றி,
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், கோலியின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி திரில் வெற்றியை ருசித்து தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
கடைசி ஆட்டம்
இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது. இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கேதர் ஜாதவ், அஸ்வின் சேர்க்கப்பட்டனர். கேதர் ஜாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கை அணியில் குசல் பெரேராவுக்கு பதிலாக நிரோஷன் டிக்வெலா ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.
டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் மேத்யூஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். டிக்வெலாவும், தில்ஷனும் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் ஓவரிலேயே 3 பவுண்டரி அடித்து அதிரடி காட்டிய தில்ஷன் 35 ரன்களில் (24 பந்து, 7 பவுண்டரி) ஸ்டூவர்ட் பின்னியின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். முன்னதாக டிக்வெலா 4 ரன்னில் நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து இலங்கையின் ரன்வேகம் தளர்ந்தது. சன்டிமால் (5 ரன், 31 பந்து), மஹேலா ஜெயவர்த்தனே (32 ரன், 33 பந்து, 5 பவுண்டரி) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 85 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்து பரிதவித்த நிலையில், கேப்டன் மேத்யூசும், துணை கேப்டன் திரிமன்னேவும் இணைந்து சரிவில் இருந்து தங்கள் அணியை தூக்கி நிறுத்தும் பணியில் கவனமாக ஈடுபட்டனர். சிறிது நேரம் பொறுமையாக ஆடியதால் ஸ்கோரும் மந்தமானது. 23.1 ஓவர்களில் தான் அந்த அணி 100 ரன்களை தொட்டது. 30 ஓவரில் 124 ரன்களே எடுத்திருந்தது.
மேத்யூஸ் சதம்
அதன் பிறகு படிப்படியாக ஸ்கோரை அதிகரிக்க செய்தனர். 76 பந்துகளில் அரைசதத்தை எட்டிய மேத்யூஸ் 40 ஓவர்களுக்கு பிறகு வாணவேடிக்கையில் இறங்கினார். அம்பத்தி ராயுடுவின் ஓரே ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி சாத்தினார்.
அணியின் ஸ்கோர் 213 ரன்களாக உயர்ந்த போது திரிமன்னே 52 ரன்களில் (76 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் சுழற்பந்து வீச்சை குறி வைத்து மேத்யூஸ் பட்டைய கிளப்பினார். கரண் ஷர்மாவின் ஓவரில் 2 சிக்சர்களும், அக்ஷர் பட்டேலின் ஒரு ஓவரில் 3 சிக்சர்களும், அஸ்வினின் ஓவரில் 2 இமாலய சிக்சர்களும் பறந்தன. இதற்கு மத்தியில் அவர் ஒரு நாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை 102 பந்துகளில் நிறைவு செய்தார். 27 வயதான மேத்யூசுக்கு இது 138-வது ஒரு நாள் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிகட்டத்தில் அவரது சரவெடியால் இலங்கையின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட எகிறியது. 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. மேத்யூஸ் 139 ரன்களுடன் (116 பந்து, 6 பவுண்டரி, 10 சிக்சர்) களத்தில் நின்றார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி 114 ரன்கள் திரட்டியது.
ரோகித் சர்மா 9 ரன்
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே (2 ரன்), இரட்டை சத நாயகன் ரோகித் சர்மா (9 ரன்) இருவரும் மேத்யூசின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆகி அதிர்ச்சி அளித்தனர். இலங்கைக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழப்பது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இதன் பின்னர் அம்பத்தி ராயுடுவும், கேப்டன் விராட் கோலியும் கைகோர்த்து அணியை சிக்கலில் மீட்டு சீரான வேகத்தில் பயணிக்க வைத்தனர். துரதிர்ஷ்டவசமாக இந்த ஜோடி ரன்-அவுட்டில் பிரிந்தது. அம்பத்தி ராயுடு 59 ரன்னில் (69 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.
கோலி அசத்தல்
இதைத் தொடர்ந்து கேப்டன் கோலி பொறுமையுடன் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாட, மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. 231 ரன்னுக்குள் 7 விக்கெட் (43.2 ஓவர்) சரிந்ததால் இலங்கையின் கை ஓங்குவது போல் தெரிந்தது.
இந்த தொடரில் முதல் முறையாக இந்திய அணி இப்படியொரு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டது. இதன் பின்னர் விராட் கோலியுடன் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஜோடி சேர்ந்தார். அவரின் துணையுடன் தனது 21-வது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி, இலங்கை அணியின் ஆறுதல் வெற்றி கனவையும் தூள் தூளாக்கினார்.
இந்தியா வெற்றி
கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்ட போது 49-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் வீசினார். இந்த ஒவரில் கோலி 2 அமர்க்களமான சிக்சர் அடித்து திரிலிங்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது டோனியின் சொந்த ஊர் என்பதால் அவரது பாணியில் ‘ஹெலிகாப்டர்’ ஷாட் அடித்தும் ரசிகர்களை பரவசப்படுத்தினார்.
இந்திய அணி 48.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 139 ரன்களுடன் (126 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக தன்வசப்படுத்தி இலங்கையை ‘ஒயிட்வாஷ்’ ஆக்கியது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த இலங்கை கேப்டன் மேத்யூஸ் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் 329 ரன்கள் சேர்த்த இந்திய கேப்டன் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா கடைசி போட்டியில் ‘திரில்’ வெற்றி,
Category:

0 comments