சென்னை: மேக்னா ராஜ்- கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா காதல் ஜோடிகளாயினர்.சினிமா நட்சத்திரங்கள் காதல் வலையில் விழுவது அதிகரித்து வருகிறது. சிம்பு, சித்தார்த், நயன்தாரா, ஹன்சிகா, திரிஷா, சமந்தா, மீரா ஜாஸ்மின் என இந்த பட்டியல் நீள்கிறது. தற்போது புதிய காதல் ஜோடி ஒன்று வலம் வரத் தொடங்கி உள்ளது. ‘காதல் சொல்ல வந்தேன்‘, ‘உயர்திரு 420‘, ‘நந்தா நந்திதா‘ படங்களில் நடித்திருப்பவர் மேக்னாராஜ். தமிழ் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் நடிக்கச் சென்றவருக்கு கன்னட பட ஹீரோ சிரஞ்சீவி சார்ஜாவுடன் நட்பு ஏற்பட்டது. பிறகு அது காதலாக மாறியது. தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சண்டக்கோழி’, ‘பீட்சா’, ‘காக்க காக்க’, ‘பையா’, ‘பாண்டியநாடு’ படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து ஹீரோவாக நடித்திருக்கிறார் சிரஞ்சீவி சார்ஜா. படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்தபோது சிரஞ்சீவிக்கும், மேக்னாவுக்கும் காதல் மலர்ந்தது. அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது.
ஹீரோவுடன் மேக்னா திடீர் காதல்
சென்னையில் ரூ.3,267 கோடி செலவில் மோனோ ரெயில் சேவை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மோனோ ரெயில்
சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்ற விதத்தில் மின்சார ரெயில், பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில், விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னைக்கு மோனோ ரெயில் வருகிறது.
அந்த வகையில் இரண்டு தடங்களில் இந்த மோனோ ரெயில் இயக்கப்பட உள்ளது. முதலில் பூந்தமல்லி–போரூர்–வடபழனி–கத்திப்பாரா இடையே மோனோ ரெயில் இயக்கப்படும். அடுத்து வண்டலூர்–மேடவாக்கம்–வேளச்சேரி–கத்திப்பாரா இடையேயும் மோனோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
மத்திய அரசு அனுமதி
முதலில், ரூ.3,267 கோடி மதிப்பில், பூந்தமல்லி–கத்திப்பாரா இடையே மோனோ ரெயில் திட்டத்தை (20.68 கி.மீ. தொலைவிலானது) செயல்படுத்துவதற்கு மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை நேற்று கொள்கை அடிப்படையிலான அனுமதியை வழங்கியது.
இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி உதவி எதுவும் வழங்காது. மாநில அரசு, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை–தனியார் கூட்டு பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் மட்டுமே இந்த திட்ட வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, செயல்பாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
நிபந்தனைகள்
இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுகிறபோது மத்திய அரசு விதிக்கிற நிபந்தனைகள் இந்த திட்டத்துக்கும் பொருந்தும். அந்த வகையில், மாநகருக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து சீரமைப்பு திட்டத்தின்கீழ் கட்டண அடிப்படையிலான வழிமுறைகளை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
உரிய கால இடைவெளிகளில் கட்டணங்களை மாற்றியமைப்பதற்கு என ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும்.
நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக ஒன்றுபட்ட மாநகர போக்குவரத்து ஆணையம், ஒரு சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படவேண்டும்.
மத்திய மாநில அரசுகள் இணைந்து கண்காணிப்பு வழிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இரு தரப்புக்கும் இடையேயான புரிந்துணர் ஒப்பந்தத்தில் இது தொடர்பாக விரிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசு நிபந்தனைகள் விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரூ.3,267 கோடியில் சென்னையில் மோனோ ரெயில் மத்திய அரசு அனுமதி
பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் சார்பில், இந்த ஆண்டில் மிகவும் முன்னேறிய வீராங்கனையாக கனடாவின் 20 வயதான பவுச்சார்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விம்பிள்டனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பவுச்சார்ட் உலக பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் முதல் முறையாக தகுதி பெற்று சாதனை படைத்தார். ‘எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. ஒவ்வொரு நாளும் நான் முன்னேற்றம் காண முயற்சிக்கிறேன். ஏற்கனவே சில புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளேன். அதை நோக்கி அடுத்த ஆண்டில் பயணிப்பேன்’ என்று பவுச்சார்ட் கூறினார்.
பவுச்சார்ட்டுக்கு கவுரவம்
லைபீரியாவிலிருந்து இந்தியா திரும்பிய இந்தியர் ஒருவருக்கு எபோலா தொற்று இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள், இந்த விவகாரத்தில் அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பாகவும் யாரு பீதி அடைய தேவையில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
”இது மிகவும் ஆபத்து நிறைந்த ஒன்று. எபோலா நோய்க்கு அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் இந்தியாவுக்கு வந்த பிறக்கு தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கபப்ட்டுள்ளார். அந்த இளைஞர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். நிலைமை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளோம். எனவே பீதி அடைய தேவையில்லை. நிலைமை கட்டுபாட்டின் கீழ் உள்ளது” என்று சுகாதராத்துறை மந்திரி ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் டெல்லிக்கு விமானம் மூலம் வந்த இவர்மீது , உலக சுகாதார அமைப்பின்(WHO) விதிமுறைகளின்படி செய்யப்பட்ட பரிசோதனைகளில், எந்த ஒரு வைரஸ் தொற்றும் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவரது விந்தில் எபோலா வைரஸின் சில கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது எபோலோ நோய் அல்ல. என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மேலும்,
அண்மை வாரங்களில் எபோலோ நோய் பரவியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் ஆயிரகணக்கான பயணிகளை இந்தியா தடுத்துள்ளது நினைவு கூறத்தக்கது.
எபோலாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் மீண்டு வருகிறார்: பீதி அடைய தேவையில்லை: சுகாதாரத்துறை மந்திரி
இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எல்லைக்கட்டுபாட்டு பகுதியை அஜாக்கிரதையாக கடந்த 13 வயது இந்திய சிறுவனை பாகிஸ்தான் ராணும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
அஜாக்கிரதையாக எல்லைக்கட்டுபாட்டு பகுதியை கடந்த இந்திய சிறுவனை திரும்ப ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் இறந்ததையொட்டி, தொடர் கண்காணிப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஆய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகளில் 11 பச்சிளம் குழந்தைகள் கடந்த 14–ந்தேதி முதல் இன்று வரை இறந்துள்ளனர் என்பதை அறிந்து, இது குறித்த ஒரு ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் நத்தம் இரா.விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பெ.மு.பஷீர் அஹமது, ப.செந்தில் குமார், என்.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிகிச்சை குறைபாடு இல்லை
தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் இறப்புகள் அனைத்தும் பல்வேறு இயற்கையான காரணங்களால் தான் நிகழ்ந்துள்ளது என்பதும், இதில் சிகிச்சை குறைபாடு எதுவும் இல்லை என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் உயிருடனும், நல்ல வளச்சியுடனும் பிறப்பதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழகத்தில் பல்வேறு முன்னோடி திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தியுள்ள காரணத்தால் இந்தியாவிலேயே குறைந்த குழந்தை இறப்பு விகிதத்தில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் என்ற உயர் நிலையை எட்டியுள்ளது. அகில இந்திய அளவில் ஆயிரம் உயிருடன் பிறக்கும் குழந்தைகளில் 40 குழந்தைகள் இறப்பு என்று உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு 21 தான். தர்மபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 19 தான். தர்மபுரி மாவட்டத்தில் 77 சதவீதம் பிரசவங்கள் அரசு மருத்துவ நிலையங்களிலேயே நடைபெறுகின்றன.
சிசு மரண விகிதம்
ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களின் காரணமாகத் தான் தமிழ்நாட்டில் சிசு மரண விகிதம் மிக குறைவாக உள்ளது. தாய் மற்றும் சேய் நலன் காக்கும் வகையில் ரூ.12 ஆயிரம் வழங்கப்பெறும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம், ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் நிலைப்படுத்தும் பிரிவுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், பிரசவ உடனாளர் திட்டம், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிசு மரண விகிதத்தை மேலும் குறைக்கும் பொருட்டு தற்போது 64 பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்களும், 114 பச்சிளங்குழந்தைகள் நிலைப்படுத்தும் பிரிவுகளும் மாநிலம் முழுவதிலும் செயல்பட்டு வருகின்றன.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14–ந்தேதியன்று 5 பச்சிளங்குழந்தைகள் இறந்தன என்று தெரிந்தவுடன், சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பச்சிளங்குழந்தைகள் தீவிர கண்காணிப்புப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர், டாக்டர் சீனிவாசன் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சென்னை மருத்துவ குழு
அவரது ஆய்விலிருந்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எந்தவொரு மருத்துவ ரீதியான குறைபாடுகளும் காணப்படவில்லை. தற்போதும் 73 பச்சிளங்குழந்தைகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் பச்சிளங்குழந்தை நிபுணர்கள் டாக்டர் நாராயண பாபு, டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர் குமுதா ஆகியோர் தர்மபுரி மருத்துவமனையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
எடை குறைவு
இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில் 7 குழந்தைகள் இரண்டரை கிலோ எடைக்கு குறைவாக இருந்தன. அதில் 5 பச்சிளம் குழந்தைகள் 1½ முதல் 1¾ கிலோ எடை மட்டுமே இருந்தன. இந்த குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பெற்றெடுக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 37 வார கர்ப்ப காலத்திற்குப் பதிலாக 28 லிருந்து 34 வாரத்தில் குறைப்பிரசவம் நடைபெற்றுள்ளது. இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில், 8 குழந்தைகள் இதர மருத்துவமனைகளில் இருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த நான்கு நாட்களில் 11 குழந்தைகளின் இறப்புக்குக் காரணம், மிக இளம் வயது தாய்மார்கள், முந்தைய பிரசவத்திற்கும் தற்போதைய பிரசவத்திற்கும் மிகக் குறைந்த இடைவெளி இருந்தது, குறைப் பிரசவம், பிறந்த குழந்தை மிகக் குறைவான எடை கொண்டிருந்தது ஆகியவையே ஆகும்.
தொடர் கண்காணிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் சிசு மரண விகிதம் 19 என உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக மாதமொன்றுக்கு 2,050 உயிருள்ள குழந்தைகள் பிறக்கின்றன.
39 சிசு மரணங்கள் ஏற்படுகின்றன. அந்த விகிதாச்சார அடிப்படையிலேயே நடப்பு மாதமும் சிசு இறப்பு ஏற்பட்டிருந்தாலும், நான்கு நாட்களில் சிறிதளவு அதிக இறப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர் கண்காணிப்புக்காக கீழ்க்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:–
கண்காணிப்பு நடவடிக்கைகள்
* மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து பச்சிளங்குழந்தைகளுக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
* தர்மபுரி மாவட்டத்தில் பிரசவம் நடைபெறும் 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் சிக்கலான பிரசவங்களை உரிய நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* கர்ப்பகால பராமரிப்பை கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
* இணை இயக்குநர் சுகாதாரம், துணை இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூலம் எடை குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து மேல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
11 குழந்தைகள் இறப்பு: தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு முதல்–அமைச்சர் அறிக்கை
முல்லைப்பெரியாறு அணை 141.30 அடி நிரம்பியுள்ள நிலையில், தற்போது அப்பகுதியில் மழை குறைந்ததால், 142 அடியை எட்ட ஓரிரு நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–
முல்லைப்பெரியாறு அணை
தமிழகத்தில் உள்ள மேட்டூர், பவானிசாகர், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட முக்கிய அணைகளில் ஒன்று முல்லைப்பெரியாறு. முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டு ஆறுகள் சேரும் இடத்தின் கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து, முல்லைப்பெரியாறு அணை என்று அழைக்கப்படுகிறது. இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 8 ஆயிரத்து 144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர் மற்றும் தேனி– அல்லிநகரம் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், இந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குடிநீர்த்தேவையையும் நிறைவேற்றி வருகிறோம். இதுதவிர மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், உசிலம்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றிய பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனி குடிநீர்திட்டம் மூலம் இப்பகுதிகளின் குடிநீர் தேவையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஆய்வு குழு
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தில் கேரள அரசியல் கட்சிகளும், பாதுகாப்பாகவும், பலமாகவும் இருக்கிறது என்கிற நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் உள்ளன.
இதுகுறித்து கேரளவில் பல்வேறு போராட்டங்களும் நடந்துவந்தன. இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய கடந்த 2010–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில், மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி.டி.தட்டே, இந்திய அரசின் நீர் ஆணையத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் பி.கே.மோஹதா, தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரள அரசின் பிரதிநிதியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோரை உறுப்பினராக கொண்ட 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
142 அடி தண்ணீர்
இக்குழு அணையை ஆய்வு செய்து 2012–ம் ஆண்டு ஏப்ரல் 25–ந் தேதி அளித்த தனது அறிக்கையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக கூறி உள்ளது. அதன்படி தற்போது பெய்து வரும் மழையால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் கடந்த 2006–ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால் அப்போது 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.
பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த நிலையில் ‘வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைத்த’ கதையாக, முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் நிரப்புவது தொடர்பாக, கேரள மாநில அரசியல் கட்சியினர் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
அணைக்குள் தேவையில்லாதவர்கள் நுழைவதை தடுப்பதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளோம். இருந்தாலும், கடந்த வாரம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நேற்றைய நிலவரப்படி 141.30 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் தற்போது மழை அளவு குறைந்துள்ளதால், 142 அடியை எட்ட இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
141.30 அடி நிரம்பிய நிலையில் முல்லைப்பெரியாறு அணை ஓரிரு நாட்களில் 142 அடியை எட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள குழந்தைகளின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
மிகுந்த அதிர்ச்சி
இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் 5 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மேலும் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளது என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
அமைச்சர் நேரில் செல்ல வேண்டும்
இன்று(நேற்று) கூட தர்மபுரி மருத்துவமனையில் இருந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
11 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்ததற்கு முழுப் பொறுப்பையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அக்குடும்பத்திற்கு தேவையான நிதி உதவிகளையும் செய்திட வேண்டும்.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதைப்போல கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை இந்த அரசு வழங்கவில்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்து விட்டது. தமிழக அரசு இனியும் இதுபோன்ற கட்டுகதைகளை அவிழ்த்து விடாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருகின்ற பிஞ்சு குழந்தைகளை காப்பாற்ற சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும்.
தர்மபுரியில் நடைபெற்ற சோக சம்பவத்தை படிப்பினையாகக் கொண்டு தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, அங்கே சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரியில் நடைபெற்ற சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்த மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளை காப்பாற்ற நடவடிக்கை விஜயகாந்த் வலியுறுத்தல்
திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், கன்னியாகுமரி ஆகிய அ.தி.மு.க. மாவட்ட அமைப்புகள் மாற்றியமைக்கப்படுகின்றன என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மாவட்ட அமைப்புகள்
நிர்வாக வசதிக்காக அ.தி.மு.க. மாவட்ட அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட அமைப்புகள் மாற்றியமைக்கப்படுகின்றன.இதுவரை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர் கிழக்கு, வேலூர் புறநகர் மேற்கு என்று இருந்த மாவட்ட அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, இனி வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு என்று செயல்படும்.
வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக என்.ஜி.பார்த்திபனும், வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் கே.சி.வீரமணியும் செயல்படுவார்கள்.
ஒன்றியங்கள் இணைப்பு
வேலூர் கிழக்கு மாவட்டத்தில், அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், வேலூர் மேற்கு மாவட்டத்தில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், சில அ.தி.மு.க. ஒன்றியங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, பரங்கிமலை கிழக்கு, பரங்கிமலை மேற்கு ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு, பரங்கிமலை ஒன்றியமாக இனி செயல்படும்.
இதேபோல், திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு, திருப்பூர் ஒன்றியமாக இனி செயல்படும்.
தளவாய் சுந்தரம் நியமனம்
மேலும், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங்கள் இணைக்கப்பட்டு, இனி கன்னியாகுமரி மாவட்டமாக செயல்படும். கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக என்.தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், ஈரோடு மாநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் ஆகிய தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாநகரில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளும், திருப்பூர் மாநகரில் அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய பகுதிகளும், திருப்பூர் புறநகரில் தாராபுரம், காங்கேயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளும் இடம்பெறும்.மேற்கண்ட தகவலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், கன்னியாகுமரி ஆகிய அ.தி.மு.க. மாவட்ட அமைப்புகள் மாற்றியமைப்பு ஜெயலலிதா அறிவிப்பு